கி.பி.1378லிருந்து போப்மார் ரோமில் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
கி.பி.1870ல் இத்தாலி அரசன் ரோமையும் போப்பின் ஆளுகையிலிருந்த
நாடுகளையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தான். கி.பி.1929 பிப்ரவரி
11ம் தேதி இத்தாலி அரசுக்கும் வத்திக்கானுக்குமிடையே ஒரு ஒப்பந்தம்
கையெழுத்தானது. இத்தாலி பிரதம மந்திரி முசோலினியும், கார்டினல்
கேஸ்பாரியும் கையெழுத்திட்டனர். இவ்விதமாய் வத்திகான் என்ற சிறுநகரம் சுய
ஆட்சியுடைய குறுநிலமாக மாறியது. சுமார் 109 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த
சிறுநாடு தனிக்கொடி, தனி தபால்தலை, தனி ராணுவம், தனி குடியுரிமை ஆகிய
சிறப்புகளையுடையதாய் விளங்குகிறது.
ரோமன் கத்தோலிக்க சபையின் குறிப்புகளிலிருந்து அறிவது:....
ரோமன் கத்தோலிக்க சபை உலகிலுள்ள எந்த ஆளுகைகளுக்கும் அடிமைப்பட்டதல்ல.
போப் திருச்சபையின் தலைவராயிருப்ததால் அவரே முழு உலகத்திற்கும்
ராஜாதிராஜா. மனுக்குலத்தின் தலைவர். போப்மூலமாய் இயேசுகிறிஸ்து
மாம்சத்தில் 'வெளிப்பட்டு ஆட்சி செய்கிறார். எனவே இப்போது உலகிலுள்ள
இயேசுகிறிஸ்து போப் அவர்களே! போப் பேசினால் இயேசு பேசுகிறார் என்று
பொருள். எனவே போப்பின் பேச்சை பரிசோதித்துப் பார்க்க யாருக்கும்
உரிமையில்லை. கீழ்படிவதே நமது கடமை'. இதுவே அவர்கள் உறுதியாய் நம்புவது.
எனவே போப் 'போப் ஆண்டவராய்' உயர்த்தப்பட்டார்.
மத் 16:16-20ல் இயேசு பேதுருவைக் குறித்துசொன்ன காரியங்களை அடிப்படையாகக்
கொண்டதே தங்கள் கொள்கை எனக் கூறுகின்றனர்.
ஆதித் திருச்சபையின் முதல் தலைவர் பேதுருவா?
இயேசு பேதுருவைப் பார்த்து...
"நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்
கட்டுவேன்... பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்;
பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்
பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும்
கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்"(மத் 16:16-19)
இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்
பேதுரு என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை'பெட்ரோஸ்'. இந்த
கல்லின்மேல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை'பெட்ரா'. பெட்ரோஸ்
என்றால்'கல்'என்று பொருள். 'பெட்ரா' என்றால்'பெரிய பாறை'. நீ சிறு
கல்லாயிருக்கிறாய்; இந்த பெரிய பாறையின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று
இயேசு கூறினார். இந்தப் பெரிய பாறை யார்?; இயேசுகிறிஸ்துவே.
"அந்தக் கன்மலை கிறிஸ்துவே"(1கொரி.10:4; ரோமர் 9:33).
"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால்
தெரிந்துகொள்ளப்பட்டதும்விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய
அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்"(1பேதுரு 2:4).
(இதை எழுதிய பேதுரு நானே அந்தக் கல் என்று சொல்லவில்லை)
"இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்"(எபே.2:20)
"அவர்மேல்(இயேசு வின்மேல்) மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு...
அவர்மேல்(இயேசு) நீங்களும்... கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்"(எபே.2:21,22).
எனவே திருச்சபை இயேசுகிறிஸ்துவின்மேல் கட்டப்பட்டு வருகிறது;
பேதுருவின்மேல் அல்ல.பெந்தெகொஸ்தேநாளில் திருச்சபை ஆரம்பமானபோது பேதுருவை
தேவன் பயன்படுத்தினார். பேதுருவின் பிரசங்கத்தினால் 3000 பேர்
மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டனர்.
"இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து"என்ற பேதுருவின்
அறிக்கையின்மேல் திருச்சபை கட்டப்படுகிறது என்றும் வேத பண்டிதர் விளக்கம்
கொடுக்கின்றனர்.
"அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல்
கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்" (எபே.2:20) என்று பவுல்
குறிப்பிடுகிறார். அதாவது அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் இயேசுவே
தேவகுமாரன் என்று அறிக்கையிட்ட விசுவாச அறிக்கையின்மேல் திருச்சபை
கட்டப்படுகிறது.
பேதுருதான் முதல் போப் என்றும், அவர் ரோமில் 25 ஆண்டுகள்
பதவியிலிருந்தார் என்றும் கூறப்படும் கருத்துக்கு வேத ஆதாரமுமில்லை,
சரித்திர ஆதாரமுமில்லை.
பேதுருதான் முதல் போப் என்றால் இவர் திருமணமானவர் என்றும், அவர் தம்
மனைவியை ஊழியத்திற்குப் போன இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்றார் என்றும்
வேதம் கூறுகிறது(மத்.8:14; 1கொரி.9:5). சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலைக்
கேள்விப்பட்ட எருசலேம் சபையார் பேதுருவையும், யோவானையும் சமாரியாவிற்கு
அனுப்பினர்.(அப் 8:14).
பேதுரு சபைக்குக் கட்டுப்பட்டு நடந்தாரேயல்லாமல், சபைக்கு தலைவராக
செயல்படவில்லை. சபையின் தூண்களாக யாக்கோபும், பேதுருவும், யோவானும்
கருதப்பட்டனர்(கலா.2:9). அப்போஸ்தலரில் ஒருவர்தான் பேதுரு; சபைக்குத்
தலையானவர் கிறிஸ்துவே(எபே.5:23)
"கண்காணியானவன் (பல சபைகளை மேற்பார்வை செய்பவர்) ஒரே மனைவியை உடைய
புருஷனாக இருக்க வேண்டும்"(1 தீமோ.3:2).'கண்காணி'என்பதற்கு
ஆங்கிலத்தில்'பிஷப்'என்று வருகிறது. திருமணம் செய்யக் கூடாது என்று பவுல்
எழுதாமல், ஒரு மனைவியுடன் நல்வாழ்க்கை வாழ்பவனாக இருக்க வேண்டும் என்று
எழுதுகிறார். ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்கும், ஒன்றுமே
வேண்டாம் என்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.
பவுல் இதைத் தொடர்ந்து எழுதும்போது பிற்காலங்களிலே தவறான கொள்கைகளை அந்த
பொய்யர் கட்டளையிடுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.
"விவாகம் பண்ணாதிருக்கவும்"(1 தீமோ.4:2)
இந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் ஒரு வசனமாக குறிக்கப்பட்டுள்ளது கவனத்திற்குறியது.
"மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற
ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை
விட்டு விலகிப் போவார்கள்.
விவாகம் பண்ணாதிருக்கவும்... அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்"(1 தீமோ.4:1-3).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக