செவ்வாய், 11 அக்டோபர், 2016

சிலுவை மொழிகளும் உயிர்த்தெழுதல் தியானமும் பாசமுள்ள கிறிஸ்து (1)

'தம்முடைய தாயை நோக்கி ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். அந்த சீஷனைநோக்கி
அதோ உன் தாய் என்றார்'
(யோ:19:26:27)

சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு முதலாவது தன்னை
சிலுவையிலறைந்தவர்களுக்காக ஜெபித்தார். இரண்டாவது தன்னை நோக்கி ஜெபித்த
குற்றவாளிக்கு பரதீசை வாக்களித்தார். மூன்றாவது தன் தாய்க்கு பராமரிப்பை
ஏற்படுத்தி தன் குடும்பப் பொறுப்பை நிறைவேற்றினார். அன்று தன் சீடரைப்
பார்த்து உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. உங்களை திக்கற்நவர்களாக
விடேன் என்று கூறிய இயேசு தன் தாயையும் விட்டுவிடாமல் அவருக்கு அடைக்கலம்
கொடுத்து ஒரு புதிய குடும்ப உறவை ஏற்படுத்தினார். இயேசு மனித உறவுக்கும்
இறை உறவுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்தார். இதனை மூன்று குறிப்புகளில்
தியானிப்போம்.

குடும்ப பாசம் மிகுந்தவர் இயேசு

தேவ குமாரனாகிய கிறிஸ்து மனுமக்களை மீட்கும்படி உலகுக்குவந்தபோது ஒரு
குடும்பத்தில் ஒரு நபராகப் பிறந்து வளர்ந்து தன் பணியைச் செய்தார்.
ஆதியில் தேவன் உலகைப் படைத்தபோது மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று
கண்டபோது அவனை ஒரு குடும்பமாக அமைத்தார். பாவம் செய்த மனுக்குலத்தை
மீட்கும்படி தேவன் தனது குமாரனை அனுப்பின வேளையிலும் தான் உருவாக்கிய
குடும்பத்தில் ஒரு நபராகப் பிறந்து வரும்படிச் செய்தார். இயேசு தான்
பிறந்த குடும்பத்தில் குடும்பபாசம் மிகுந்தவராக வாழ்ந்தார். அவர் தன்
உலகப் பெற்றோர்களாகிய யோசேப்பு, மரியாள் என்பவர்களுக்குக் கீழ்படிந்து
வாழ்ந்தார். அவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும்,
மனுஷர்தயவிலும் அதிகமதிகமாக விருத்தியடைந்தார். அவர் வாலிபனானபோது
தகப்பனின் தச்சு வேலையை அவர் செய்து குடும்பத்தைத் தாங்கினார். எனவே
மாற்கு 6:3-ல் இயேசுவின் பகைவர் இவன் தச்சனல்லவா என்றார்கள்.

இயேசு ஊழியம் செய்தபோதும் தன் குடும்பத்தைத் துறந்து துறவியாக ஊழியம்
செய்யவில்லை. அவர் குடும்பத்தின் ஓரு நபராக இருந்து ஊழியம் செய்தார்.
எனவே இயேசுவின் பகைவர் அவருடைய ஞானத்தைக் கண்டபோது இவன் தச்சனல்லவா?
மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன்
என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில்
இருக்கிறார்களல்லவா? என்று சொல்லி அவரைக் குறித்து
இடறலடைந்தார்கள்(மாற.6:3). இவ்வாறு இயேசு ஒரு குடும்பத்தில் பிறந்து
குடும்ப பாசம் உடையவராக வாழ்ந்து ஊழியம் செய்தார்.

குடும்ப பாசம் மிகுந்த இயேசு இப்போது சிலுவையில்
தொங்கிக்கொண்டிருக்கிறார். சிலுவையை சூழ திரளான மக்கள் நின்று இயேசுவைப்
பரிகாசம் செய்கிறார்கள். இயேசுவை நேசித்தவர்களும் அக்கூட்டத்தில் இங்கும்
அங்குமாக நின்று தங்கள் மார்பில் அடித்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவின் தாயாகிய மரியாளும் அக்கூட்டத்தில் பட்ட மரம்போல் நிற்கிறாள்.
அவள் வாழ்க்கையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. தன் கணவன் யோசேப்பு
மரித்துவிட்டார். குடும்பத்தைப் பராமரிக்கவேண்டிய மூத்த மகன் சிலுவையில்
தொங்குகிறார். அவள் கண்கலங்கி நிற்கிறாள்.

சிலுவையில் தொங்கும் இயேசு தன் வேதனையின் மத்தியிலும் தன் குடும்பப்
பொறுப்பை மறக்கவில்லை. சோகத்தோடு நிற்கும் தாயைக் கண்ட இயேசு ஸ்திரியே
என்று அழைத்து அதோ உன் மகன் என்று யோவானை சுட்டிக் காட்டினார். யோவானைப்
பார்த்து அதோ உன் தாய் என்று மரியாளை சுட்டிக்காட்டினார். அந்நேரம் முதல்
யோவான் மரியாளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். இப்படி மரண வேளையிலும்
இயேசு தன் குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தார்.

பிள்ளைகள் பெற்றோரை பராமரிக்க வேண்டும். தங்கள் குடும்பங்களுக்குச்
செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும். அனேக குடும்பங்கிளில் பிள்ளைகள்
தங்கள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதினாலும் பெற்றோர்
வேதனைப்படுகிறார்கள். சில ஊழியக்காரர்கள் கூட பெற்றோரை பராமரிப்பதில்லை.
தகப்பனையாவது, தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்
பாத்திரனல்ல என்று கூறிவிடுகிறார்கள். ஊழியம் செய்கிறவர்களும் தங்கள்
பெற்றோரை பராமரிக்க வேண்டும். உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக
என்பது கற்பனை. பிற்காலத்தில் 'கொர்பான்' என்ற காணிக்கையை ஆலயத்தில்
செலுத்தினால் அவர்கள் பெற்றோரை கவனிக்க வேண்டாம் என்ற ஒருநியமத்தை
ரபிமார்கள் ஏற்படுத்தினார்கள். இதனை இயேசு வன்மையாக கண்டித்தார். மாற்கு
7:1:10-13. நாம் குடும்ப பாசம் உடையவர்களாக குடும்பத்துக்குச்
செய்யவேண்டியவைகளை செய்யவேண்டும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக