ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சிலுவை மொழிகளும் உயிர்த்தெழுதல் தியானமும் மீட்கும் கிறிஸ்து (1)

'இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன்'
(லூக் 23:43)

சிலுவையில் தொங்கும் இயேசு தன் பகைவருக்காக ஜெபித்தார். அதன்பின் இயேசு
சிலுவையில் அமைதியாகத் தொங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சூழ
நின்வர்கள் சிலுவையில் தொங்கும்இயேசுவைப் பார்த்து ஐந்து வார்த்தைகளை
மொழிந்தார்கள்.

அந்த வழியாக நடந்துபோகிற வழிப்போக்கர்கள் 'தேவாலயத்தை இடித்து மூன்று
நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள். நீ தேவனுடைய
குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா'(மத் 27:40) என்று சிலுவையில்
தொங்கும் இயேசுவைப் பார்த்து தங்கள் முதலாம் மொழியை மொழிந்தார்கள்.

மேலும் அவர்கள் தொடர்ந்து'தன்னை தேவனுடைய குமாரன் என்று சொல்லி தேவன்மேல்
நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை
இரட்சிக்கட்டும்'(மத் 27:43) என்று மூன்றாவது மொழியையும் மொழிந்தார்கள்.

சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனும் இயேசுவை தூஷித்து 'நீ
கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்' என்று நான்காவது
மொழியை மொழிந்தான்.

சிலுவையில் அறையப்பட்ட அடுத்த குற்றவாளி அவனைக் கடிந்துகொண்டு
இயேசுவைப்பார்த்து 'ஆண்டவரே உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை
நினைத்தருளும்' என்று ஐந்தாவது வார்ததையை மொழிந்தான்.

இப்பொழுது அமைதியாக தொங்கிக்கொண்டிருந்த இயேசு அக்குற்றவாளியைப் பார்த்து
'இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன்' என்று தனது இரண்டாவது மொழியை மொழிந்தார்.

மீட்பின் உச்சக் கட்டத்தை சிலுவையில் காண்கிறோம்
இயேசு, பாவிகளை இரட்சிக்கும்படி வந்தார். அவரிடம் பலவித பாவங்களைச் செய்த
மக்கள் வந்து பாவமன்னிப்பைப் பெற்றார்கள். விபசாரத்தில் பிடிபட்ட
பெண்ணுக்கு பாவ மன்னிப்பளித்தார். சமாரிய ஸ்திரியைத் தேடிச்சென்று
மன்னித்து தன் பிள்ளையாக்கினார். அனியாய வரி வசூலித்த சகேயுவின்
வீட்டிற்குச் சென்று தேவ குடும்பமாக்கினார். காலமெல்லாம் கொலைசெய்து
சிலுவையில் தொங்கி சில மணிநேரத்தில் மரிக்க இருக்கும் குற்றவாளியையும்
இயேசு மன்னித்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளி, ஆண்டவரே உமது
இராஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று இயேசுவை நோக்கி
மன்றாடினபோது, நீ காலமெல்லாம் கொலை, கொள்ளைகளைச் செய்துவிட்டு
மரிக்கப்போகும் இந்த வேளையிலா மன்னிப்புக் கேட்கிறயாய் என்று அவர்
கூறவில்லை. உடனடியாக அவன் பாவங்களை மன்னித்து இன்றைக்கு என்னுடனே நீ
பரதீசிலிருப்பாய் என்றார்.

ஒருநாள் இயேசுவின் சீடர் தங்களில் ஒருவன் அவரது வலது பாரிசத்திலும்
உட்காரும்படி அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். ஆனால் ஆண்டவரோடு
பரதீசில் உட்காரும் பாக்கியத்தை காலமெல்லாம் கொலைபாதகனை இரட்சித்த தேவன்
இன்றும் கொலைபாதகர்களை இரட்சிக்கிறார்.

கொலை செய்து கொலைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
கைதிகள் அங்கு நடைபெறும் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டு
இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு உலகில் மரண தண்டனை பெற்று
மறுமையில் தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்.

நமது உடலில் உயிர் இருக்கும் வரை மீட்பின் வாசல் நமக்காக திறந்து
இருக்கிறது. எனவே பின்பு பாரத்துக்கொள்ளலாம் என்று வாழக்கூடாது. யாருடைய
வாழ்க்கை எப்படி முடியும் என்பதை நாம் அறியோம். ஆகவே இன்றே இரட்சண்ய
நாள். இன்றே இரட்சிப்பை பெற்றுக்கொள்வோம்.

மீட்பை விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இயேசு உலகில் உள்ள அனைத்து மக்களை மீட்ககும்படியாகவே சிலுவையில்
தொங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் மீட்புப்
பெறவில்லை. யார் யார் விசுவாசத்தோடு ஆண்டவர் என்னை மீட்க சிலுவையில்
தொங்கினார் எனடபதை விசுவாசித்து அவரை நோக்கிப் பார்த்தார்களோ அவர்களே
மீட்புப் பெற்றார்கள். இயேசுவோடு இரு குற்றவாளிகள் சிலுவையில்
தொங்கினார்கள். அவர்களில் ஒருவன் மாத்திரமே மீட்புப் பெற்றான். காரணம்
என்ன? நடுச் சிலுவையில் தொங்குவது தன்னைப் போன்ற ஓர் குற்றவாளியல்ல, உலக
இரட்சகர் என்பதை விசுவாசித்து தன் பாவங்களை அறிக்கைசெய்து விசுவாசத்துடன்
அவரைப்பார்த்து மன்றாடினார். எனவே அவன் மீட்புப்பெற்றான். மறுகுற்றவாளி
இயேசுவை தூஷித்தான். அவரை மேசியாவாக அவன் காணவில்லை. தன் பாவங்களையும்
அறிக்கை செய்யவில்லை. எனவே மீட்புப் பெறவில்லை.

யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தான். பின்பு தன் பாவத்தை உணர்ந்தான்.
குற்றமில்லாத இரத்தத்தை காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்று
அறிக்கை செய்தான். 30 வெள்ளிக் காசையும் வீசி எறிந்தான். ஆனால்
சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கிப் பார்க்கவில்லை. தன் பாவத்தை
மன்னிக்கும்படி அவரிடம் மன்றாடவில்லை. எனவே நான்றுகொண்டு செத்துப்போனான்.
பேதுரு, இயேசுவை மறுதலித்தான். பின்பு தன் தவறை உணர்ந்து
மனஸ்தாபப்பட்டான். இயேசுவை நோக்கிப்பார்த்தான். அவரும் அவனை
நோக்கிப்பார்த்தார். அவன் பாவமன்னிப்புப் பெற்றான். நாம் மீட்புப் பெற
பாவங்களுக்காக மனம் வருந்தி அறிக்கை செய்தால் போதாது. இயேசுவண்டை
வரவேண்டும். விசுவாசத்தோடு அவரை நோக்கிப் பார்க்கவேண்டும்.
பாவமன்னிப்புக்காகவும், அவருடைய கிருபைக்காகவும் மன்றாட
வேணடும்.'சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டதுபோல
மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல்
நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்' என்றார் இயேசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக