புதன், 21 செப்டம்பர், 2016

<h1 style="color:blue;">இந்துமதம் எங்கே போகிறது பகுதி 21 </h1> <h2>ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது. நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு
முன்பு... கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை
பொதுவாகப்
பார்த்துவிடலாம்.

பெண்களை உள்ளே அனுமதிக்காத, 'எல்லைகளை' கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி
மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா
தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி. ராமநாதபுர சமுத்திரக்
கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.

ஆனால்... இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும்
இம்மடத்துக்கு வரலாம். அதாவது,'எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.
இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம்
பார்க்கலாமா?

"பரமாத்மனே யேர் ரக்தஹவிரக்தோ அபரமாத்மநீ"...என்று போகும் வரிகள்,
பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன.
அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசைவைப்பவன்
பக்தன் கிடையாது.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்... பெண்ணோடு தேக சம்பந்தம்
கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத... லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது
கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.
இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு
வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே' என
அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் 'பக்தர்கள்' எத்தனை பேர்
இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல
பக்தர்கள்(!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால்,
இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?
"அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது..." என்று
ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும்
கூடாது என்றது தொடர்விதி.

இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு 'சிறப்பாக' நடந்து
கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண
மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல
விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.

அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல
வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர
ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின்
பக்தர்கள் ஆனார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே
கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார்.
இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று
அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே
கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.

'நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்' என
அவர்களும்... இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்
பட்டவர்கள்' என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க...
இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும்
நடந்து கொண்டிருந்தன.

மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம
தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான்
செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதி... பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச்
சென்றதாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்ததாலும் மகா பெரியவரின்
ப்ராபகண்டா பெருகியது.

அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியாரின் மதராஸ்
ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன்
எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு
சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.
"கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி
சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை
அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே
பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என
சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா
பெரியவர்.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா
பெரியவர் 'தேசாந்திரம்' எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்
போது... 'கும்பகோணம் மடாதிபதி வருகை...' என்றே அன்றைய செய்தித்தாள்கள்
பிரசுரம் செய்தன.

இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை
ஒதுக்கப் பார்க்கிறார்கள்.நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில்,
பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்' என
முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும்... காஞ்சிக்கு வந்த கதை
இப்போது புரிந்துவிட்டதா?

சரி... மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை
கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில்
எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு, சேர்ந்து மறுபடியும்
அனுபவித்துப் பார்க்கட்டுமா?

-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக