பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும்
லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில்
கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.
பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக
வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு
தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.
உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள்
தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே
பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை
ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும்
உருவகித்து "நாயக- நாயகி - பாவ"த்தை காட்டியது தமிழ் வழிபாடு.
பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ
வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்
இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில்
கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.
வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு
சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான்
லிங்கத்தின் தத்துவம்.
ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது
அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.
தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம்
கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட
முடியாது என்ற கருத்து தோன்றியதால்
லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின்
மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த
பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான்
லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த
பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன்
சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.
விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த
தேசிகர்.'நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா'என போகும் ஸ்லோகத்தில்தான்
இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.
ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம்
தழைத்திருந்த அந்த நேரத்தில்...ஒரு குரல் எழுந்தது.
இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த
அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.
"வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான்.
விஷ்ணுவை அல்ல..." என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் 'ஷிவோத்
கிருஷ்டம்' என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் -
சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான்
மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட
விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.
தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற
கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள்
எழுந்தன.
வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக
எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள்
உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம
காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு
பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என
சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.
இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு
வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.
நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்'நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம்
நாராயணா பரஹா...'என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே
சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். 'அதனால்
நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப்
பெறுங்கள்' என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.
"மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது" என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.
சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...
வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...
சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். -
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்.... )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக