நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை
பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்' என்பதை கடந்த
அத்தியாயத்தில் கவனித்தோம்.
வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான்,
சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான்.
க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும்
அவன் க்ஷத்திரியன்தான்.
-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப்
படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன்
என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம்
ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.
இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு
ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'படம் பார்த்து தெரிந்துகொள்' என்ற
தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.
'என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக்
கொடுக்கிறாரே இந்த ஆள்' என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான்
பதிலை ஆரம்பிக்கவேண்டும்.
சொல்லிக் கொடுத்தவுடனேயே 'பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல'; 'பற்றிக்கொள்ளும்
கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா
சொல்லிக் கொடுக்கப்பட்டது -
அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன்
வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது
மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர்.
இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள்
மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான
தொழிலாக 'நல்லவர்' என எழுதப்பட்டிருக்கிறது
ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன்
ப்ரம்மத்தின் அவதாரம்.
பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ
நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான்.
லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும்
சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத்
தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித்
திரட்டி தந்திருக்கிறது.
சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள்
கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம்
வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.
அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார்.
ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள்
என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி
வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.
"அய்யர் - நல்லவர்" மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான்
யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது
பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.
எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது.
சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன
சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது
சாஸ்திரம்.
என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது
சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.
சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள
வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில
மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே
செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.
(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால்
ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத்
தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை
எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள்
ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு
திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.
இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை
காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள்
பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப்
பயிற்சிதான்.
அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின்
பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும்.
பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து
தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட
மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம்
அதாவது தூக்கம்.
பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும்
வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.
இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.
இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த
பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.-
-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக