மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? அப்படியானால்...சங்கரர்
சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த
மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?...
அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த
கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான்
சொல்கிறது.
தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம்
முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்...
வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பௌத்தர்' என்றே அழைக்கப்பட்டார்.
அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால்
அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்... ப்ரஸன்ன
பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க
முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக
சுற்றினார்கள்.
வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி
வலியுறுத்தினார்கள்.
'தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே'... என சொல்லித்தான் அவர்கள்
சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்)
இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான்
இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு
சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு
வந்தார்கள்.
"நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான்
கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.
அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப... நாமும் புத்தரைப்
பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே"... என ஆலோசித்தனர். என்ன
யுக்தி?...
இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில்
நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?...
"இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இது போன்ற
மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்" என
இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின்
சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின்
சிஷ்யர்கள்... புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க
ஆரம்பித்தனர்.
ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக்
கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு
மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை
நிர்மாணித்தார்கள்.
மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது
மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை
விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு... சங்கரரின் முக்கியமான
சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள்
உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க... இம்மடங்களில் எந்தவிதமான பூஜை
புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான
மார்க்கத்தின்படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது.
கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது.
வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.
சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது.
பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக
சமையல்?...
சமையல் இல்லையென்றால்... அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே
பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி
இருக்கும்?
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... "Shankara Muths are only for
proclamation of Advydam" அதாவது சங்கரரின் சிஷ்யர்களால்
நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத
கொள்கையை பறைசாற்றி... உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே
மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல...
இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில்
இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?
..அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக