சிலுவையினிமித்தம் ஏற்படும் நிந்தை, இழிவாய் எண்ணப்படுதல் போன்ற
துன்பங்களை நாம் மனமுவந்து ஏற்றிடவேண்டும் (கலா 6:12)."நாங்களோ
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு
இடறலாயும்...." என கூறும் வசனத்தைப் பாருங்கள்! (1கொரி 1:23).
கிறிஸ்து நமக்காக சிலுவையிலறையப்பட்டாரே அதுவா இன்றைய கிறிஸ்தவ
மார்க்கத்தாருக்கு இடறல்? இல்லை! "நாம் சிலுவையிலறையப்படுகிறோமே" அதுதான்
இவர்களுக்கு இடறல்!!
ஏனென்றால், இங்குதான் நம் எல்லா சுயமும், அது எவ்வளவு
அருமையாயிருந்தாலும் அல்லது எவ்வளவு லாபமாயிருந்தாலும் அவைகள் கொஞ்சமும்
இரக்கமில்லாமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது! அதன் சுயமரியாதைக்கோ
கிஞ்சித்தும் இடமே இல்லை!! ஆ, இங்குதான் இவர்கள் கோபம் கொள்ளுகிறார் கள்.
தங்கள் பார்வையில் இவர்கள் எவ்வளவு திறமையாய்க் காணப்பட்டு, சுயத்தில்
மகிழ்கிறார்களோ அவ்வளவு அதிகம் கோபக்கனலாகிறார்கள்! ஆனால் உண்மை என்ன
தெரியுமா? நமக்கு அருமையான இந்தஎல்லா சுயமும் மரணத்திற்கே உரியது!அது
கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சிலுவையில் அறையப்பட்டு விட்டது! அது இருக்க
வேண்டிய இடம் அதுதான்!!
1 கொரிந்தியர் 1:17-ம் வசனத்தில், "கிறிஸ்துவின் சிலுவை வீணாய் (அல்லது
வல்லமையற்றுப்) போகாதபடிக்கு..."என்றும் 18-ம் வசனத்தில் "சிலுவையைப்
பற்றிய உபதேசம்.... நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது" என்றும்
வாசிக்கிறோம்.
சிலுவையின் உபதேசத்தில் அல்லது சிலுவையில் அப்படியென்ன வல்லமையிருக்கிறது
என்று கேட்கிறீர்களா? கேளுங்கள், அது பழைய மனிதனுக்கும் அவன்
கிரியைகளுக்கும் சாவு மணி அடிக்கிறது! அவ்வல்லமை பாவத்திலிருந்து
தொடர்ச்சியான விடுதலை அளிக்கிறது! மாம்சத்தின் கிரியைகளை ஒழிக்கிறது!
ஆம், நாம் பாவம் என்று அறிந்துகொண்ட யாவற்றிலிருந்தும் விடுதலை
அளிக்கிறது மட்டுமல்ல! நாட்கள் செல்லச் செல்ல, இனி நாம் பாவம் என அறிந்து
கொள்ளப்போகும் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை! விடுதலை!! முழு
விசுவாசத்துடன் ஆக்ரோஷமாய் சிலுவையில் அறைகிறோமே, அதுவே இச்சிலுவையின்
வல்லமையான கிரியைகள். ஆம், அந்த ஆணிகள் சிலுவையிலறைப்பட்டவனை, அவன்
விரும்பும் இடத்திற்கு போக முடியாமல் வலிமையாய் சிலுவையின் மேல் இருத்தி
வைக்கிறது.... பின்பு .... கொஞ்சம் கொஞ்சமாய் சீக்கிரத்தில் 'அவன்'
செத்துப் போகிறான். இவ்வாறுமாம்சத்தின்படியான என்னை சாகடிக்கிறதேஅதுதான்
இச்சிலுவையின் வல்லமையான கிரியைகள்!
"தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச்
சீஷனாயிருக்கமாட்டான்" (லூக் 14:27)என இயேசு கூறினார். "அப்பொழுது அவரைச்
சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்.
அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள். அவர் தம்முடைய
சிலுவையைச் சுமந்து கொண்டு.... கொல்கொதா என்ற இடத்திற்குப் புறப்பட்டுப்
போனார்" (யோ 19:16-17).... தன் சிலுவையை சுமக்க வேண்டும் என்பதற்கு இதை
விட வேறு என்ன விளக்கம் வேண்டும்? அதாவது, நாம் சிலுவையிலறையப்படுவதற்கு
எதிர்பில்லாமல் வாய்ப்பு அளிக்கிறோமே, அதுதான் அதன் சரியான பொருள்!
சிலுவையில் அறையப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்டவர்கள் எவர்களோ,
அவர்களே அதை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக