புதன், 21 செப்டம்பர், 2016

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 20

காஞ்சி மடமா? கும்பகோண மடமா?

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்...
காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே
கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல். "நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த
வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம,
அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப்
பட்டிருக்கிறார்கள்)
இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம்
கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால்
மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்."
"நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே... நாங்கள் உள்ளேவர
சாத்தியப்படாதா?" என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள்
கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்...
திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி
சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில்
சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை
பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.

அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி
குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.

"நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே
செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்" குடுமியை
முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.

"பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு
மடத்துக்குள் சஞ்சரிப்போம்" என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள்
எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்... ஒரே ஒரு குரல் வித்தியாசமாய்
வெளிப்பட்டது.

"நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய
வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு
பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை
ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே..."

இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை
பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை
ஸ்தாபித்தனர்.

தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்ஙகர
மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை
பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின்
பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில்
ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.

கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ்
பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக்
கருதப்பட்டது.அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி,
துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில்
இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.

அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம்
செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை
அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.

கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான
தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை
பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத
அளவுக்கு எளிமையாக இருந்தது.

மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்...
உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும்
இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.
அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின்
உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக
விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும்,
ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என
விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி
மடத்தின் புகழ்.

அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில்
அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும்
தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட,
ஆணையிடப்பட்டது.

உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு
ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில்
ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.

காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால்
பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர்
மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70
ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.

எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு
பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என
சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும்
வந்த கதையைப் பார்ப்போமா...?

-அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக