வியாழன், 10 நவம்பர், 2016

கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (3)

'தோரா (ஐந்தாகமங்கள்)' இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு தப்பி வந்த பின்பு
எழுதப்பட்டது என்பது யூதர்களிடையே நிலவி வரும் தொன்மையான மரபு.

இரண்டாவது நூலான யாத்திராகமத்தில் இருந்தே மோசேயின் வாழ்க்கையையும்
வழிநடத்துதல்களையும் தோரா எடுத்துரைக்கிறது.

முதல் நூலான ஆதியாகமமோ உலக படைப்பையும், நாகரீக தோற்றத்தையும்,
முற்பிதாக்களின் வாழ்கையையும், எகிப்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தையும்
எடுத்து கூறுகிறது. தப்பி வந்த இஸ்ரவேலர்கள் எகிப்தில் தாங்கள்
அடிமைபட்டிருந்த காலத்திற்கு முன்பு நிகழ்ந்த சங்கதிகளை ஒன்று திரட்டி
'ஆதியாகமம்' என்ற நூலாக படைத்தனர் என்று பைபிள் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். இதுவே ஆதியாகம புத்தகத்தின் பின்னணி என்பதை பல வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகின்றன.


*.ஆதியாகமம் 22:14 - ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று
பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும்
என்றுஇந்நாள் வரைக்கும்சொல்லப்பட்டு வருகிறது.


*.ஆதியாகமம் 35:20 அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்;
அதுவேஇந்நாள் வரைக்கும்இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.


*.ஆதியாகமம் 47:26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று
யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலேஇந்நாள் வரைக்கும்நடந்து
வருகிறது;

ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல்
நீங்கலாயிருந்தது.'இந்நாள் வரைக்கும்' என்ற வார்த்தை ஆதியாகமத்தில் பல
இடங்களில் காணப்படுகிறது. யேகோவாயீரே என்ற இடத்தை பற்றி கூறும் போது அந்த
இடத்தின் பின்னணி கதையை ஆசிரியர் கூறுகிறார். அவரது கூற்றில் இருந்தே
அவர் அந்த பின்னணி சம்பவத்தை கண்ணால் கண்டவர் அல்ல என்பதும்,
அப்பகுதியில் யேகோவாயீரே இடத்தை குறித்து மக்கள் மத்தியில் நெடுங்காலமாக
நிலவி வரும் மரபுச்செய்தியை கேட்டு நம்பிக்கையின் காரணமாகவே
ஆதியாகமத்தில் எழுதியுள்ளார் என்பதும் தெளிவாகிறது. படைப்பு, ஆதாம் ஏவாள்
கதை, நோவா கதை போன்றவை தோராவிற்கு முன்பே மெசபொத்தொமிய நாகரீக பகுதியில்
விளங்கிய நம்பிக்கைகள். 'கில்மேஷ் புராணம்', 'எரிது படைப்பாகமம்' போன்ற
பழங்கால கல்வெட்டுகளில் படைப்பின் பின்னணி, ஆதாம் ஏவாள் கதை, நோவா கதை
ஆகியவை காணப்படுகின்றன.

அக்காலத்தில் நிலவி வந்த நம்பிக்கைகள், செவிவழி செய்திகள், குறிபிட்ட
இடங்களுடன் விளங்கிய மரபுச்செய்திகள், தங்கள் முன்னோர்களின் வம்ச
வரலாறுகள் என பல சம்பவங்களை திரட்டி 'ஆதியாகமம்' என்ற நூலாக ஆசிரியர்
படைத்துள்ளார்.அதன் பிறகு எகிப்தில் பட்ட துயரங்கள், மோசேயின்
வழிநடத்துதல்கள் போன்றவற்றை யாத்திராகமத்தில் இருந்து உபாகமம் வரை
எடுத்து கூறுகிறார்.

இதில் ஆசிரியரின் நோக்கம் அக்காலத்தில் தான் கண்டதை, கேட்டதை, படித்ததை,
அறிந்ததை தோராவாக படைப்பதில் தான் உள்ளது என்பதை நன்கு அறியலாம். ஒரு
கற்பனை கதையை எழுத வேண்டும் என்பதில் இல்லை. தான் என்ன சங்கதிகளை
மனப்பூர்வமாக நம்பினாரோ அதனை எளிமையாக தன் மனம்படி எழுதியுள்ளார்.

எனவே தோராவில் மோசேயின் பெயர், யேகோவாயீரே தளம், ராகேல் தூண் போன்ற
சிற்சில நேர்த்திகள் பல காணப்படுகின்றன. எளிமையான எழுத்துநடையும்
காணப்படுகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால் பண்டைய வேதங்களை இதிகாச கதைகளை ஒப்பிடும் போது
பைபிள் பல விதங்களில் தனித்து நிற்கிறது. இதன் காரணமாக தான் இறை
நம்பிக்கையாளர்கள் பலர் பைபிளை பிற வேத நூல்களை விட உண்மையாக
கருதுகின்றனர். தோரா முழுக்க முழுக்க ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகளே. ஒரு
கட்டுகதையை தீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதவில்லை, தான் என்ன
செய்திகளை நம்பினாரோ அதனை எழுதியுள்ளார்.

பைபிள் 'நம்பிக்கை' என்ற வட்டதிலேயே
எழுதப்பட்டுள்ளது.ஆசிரியர் 'நம்பிய' சங்கதிகள் உண்மைதான் என்று எடுத்து கூறுவதே
கிறிஸ்தவர்களுக்குள்ள பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக