'
கிறிஸ்தவம் மதமா, பைபிள் கட்டுகதையா? - ஒரு ஆய்வு கட்டுரை (2)
<b>உ) இயற்கை வழிபாடு - தடை!</b>
இயற்கை வழிபாட்டை தோரா தடை செய்கிறது. விலங்கு, பறவை, சூரியன், சந்திரன்,
நீர், நட்சத்திரம், ஆகாயம், செடி... என எந்த இயற்கை கூறுகளையும் வழிபட
தோரா அனுமதிப்பதில்லை. படைக்கப்பட்டவைகளை துதியாமல் படைத்தவரை
துதிக்குமாறு பைபிள் கட்டளையிடுகிறது.
<b>"நீங்கள் உங்களைக் கெடுத்துக் கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற
செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், பூமியிலுள்ள யாதொரு ஊரும்
பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின்
உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை
உங்களுக்கு உண்டாக்காத படிக்கும், உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து,
உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா
ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய
நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காத படிக்கும்,
உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்"
- உபாகமம் 4:16-19</b>
சூரிய நமஸ்காரம், அந்நிய தேவர்களை தொழுது கொள்ளுதல், இறந்தோர் வழிபாடு,
இயற்கை வழிபாடு, குறி சொல்லுதல், ஜோசியம், அஞ்சனம் பார்த்தல், மாயவித்தை,
ராசி பலன் கூறுதல், சிலை வழிபாடு என அனைத்து செயல்களுக்கும் தன்னை
விலக்கி கொண்ட ஒரே தேசமாக இஸ்ரேல் விளங்கியது. பிற வழிகளை போன்று
யூதத்தையும் ஒரு குறுகிய வட்டதிற்குள் அடைக்க முடியாது. இவைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரே பண்டைய நம்பிக்கை யூதமே (கிறிஸ்தவமே). மனிதன் கூறுவது
போல பிற வழிகள் எல்லாம் உண்டானவைகள். மனிதன் வகுத்த கோட்பாடுகளில் அவைகள்
ஒன்றி வருவதில் இருந்தே இது தெளிவாகும்.
<b>2) பைபிள் திட்டமிட்ட கட்டுகதையா?</b>
பேதுரு சொல்லுகிறது போல நாம் தந்திரமான கட்டுகதைகளை பின்பற்றுபவர்களாக
இல்லாமல் சத்தியத்தை அறிவிப்பவர்களாகவே உள்ளோம். உதாரணத்திற்கு,
யாத்திராகமம் மெசபொத்தோமியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் அக்காலத்தில்
நிலவிய பகை உணர்வையே காட்டுகிறது என்று சில மறுப்பாளர்கள் கூறுவர்.
மோசே ஒரு புராண கதாப்பாத்திரம் என்பதே அவர்களது கூற்றாக இருக்கும். ஆனால்
இது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறில்லை. மோசேயை பாரோனின் மகள்
தத்தெடுத்து வளர்த்ததாக பைபிள் கூறுகிறது.இது எந்தளவு உண்மை என்பதை
'மோசே' என்ற பெயரில் இருந்தே அறிய முடியும்.'மோசே' என்பது ஒரு எகிப்திய
பெயர், பாரோனின் குமாரத்தி அவருக்கு இட்ட பெயர்.
எபிரேய மக்களின் முதல் வேதமான 'தோரா (ஐந்தாகமங்கள்)' தன் தலையான
தீர்க்கதரிசிக்கு ஒரு எகிப்திய பெயரை கூறுகிறது. தன் முதன்மை
தீர்க்கதரிசிக்கு 'மோசே' என்ற பெயரை சூட்டாமல் ஒரு எபிரேய பெயரை சூட்டி
இருந்தால், எகிப்திய அரச பெண் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி ஒரு எபிரேய
பெயரை சூட்டியிருப்பாள் என்ற கேள்வி எழும்பும், யாத்திராகமம் ஒரு
கட்டுகதையாகும். இவ்வாறு கட்டுகதைகளை எழுதும் ஆசிரியர் பெயர், இடம்,
காலம் போன்ற பல விடயங்களில் தனக்கே தெரியாமல் தவறிழைத்து விடுவார். ஆனால்
பைபிள் எகிப்திய பெயரை எடுத்து கூறி தன் உண்மையை உறுதி செய்கிறது. 'மோசே'
என்ற பெயரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இது போன்று சிறுசிறு விடயங்கள்
நேர்த்தியாக
காணப்படுகின்றன.
இப்பொழுது குர்ஆனை எடுத்துக்கொள்ளலாம். தோரா (பைபிள்) கூறும் அதே ஆதாம்
ஏவாள், நோவா, ஆபிரகாம், மோசே... ஆகியோரின் கதைகளை சில வேறுபாடுகளுடன்
குர்ஆன் எடுத்து கூறுகிறது. ஆனால் இறைவனே நேரடியாக வசனங்களை மொழிவது
போன்ற எழுத்து நடையே முழுபுத்தகமும் காணப்படும். தந்திரமாக எழுதும்
ஆசிரியர் பிதற்றுவார் என்பதை கீழுள்ள வசனத்தில் காணலாம்.
"அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு
முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டீர்களா?
நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்று கொடுத்த பெரியவராக
இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் இதன் விளைவைத் தெரிந்து
கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும்
சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன் எனக் கூறினான்"
- குர்ஆன் 26:49
இஸ்ரவேலர்களை வனாந்திரத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு பாரோனிடம்
(ஃபிர்அவ்ன்) மோசே (மூஸா) பல முறை எச்சரிக்கிறார். ஆனால் ஒவ்வொரு
முறையும் பாரோன் மோசேவையும் இஸ்ரவேலர்களையும் கடிந்து கொள்கிறான். பைபிள்
இந்த சம்பவங்களை எடுத்துரைப்பது போல குர்ஆனும் கூறுகிறது. ஆனால், பாரோன்
இஸ்ரவேலர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்வேன் என்று எச்சரித்ததாக
குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு பாரோன் சிலுவை தண்டனையை கூறி இஸ்ரவேலர்களை
அச்சமூட்டியதாக தோராவில் (பைபிளில்) செய்தி இல்லை. இங்கு குர்ஆன் பிதற்றி
இருப்பதை காணலாம். முதலில் எகிப்தில் சிலுவை தண்டனைகள் இல்லை. சொல்லப்
போனால் மோசேயின் காலத்தில் சிலுவை தண்டனையே இல்லை. மோசே இறந்து கிட்டதட்ட
1000 வருடங்களுக்கு பிறகே சிலுவை தண்டனை தோன்றியது. ரோமர்களால்
நடைமுறைபடுத்தப்பட்டது. இங்கு அல்லாவே நேரடியாக வசனங்களை எடுத்து கூறுவது
போல எடுத்துகூறி வரும் ஆசிரியர் தன்னையே அறியாமல் தவறிழைத்துள்ளதை
காணலாம்.
ஆனால் பைபிளில் அக்காலத்து மக்கள் அன்றைய தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை
எளிமையாக எழுதியுள்ளனர். கட்டுகதைகளை சிந்தித்து எழுதும் ஆசிரியரின்
வரிகளில் அனேக பிதற்றல்கள் காணப்படும். பல விடயங்களில் தவறிழைத்து தன்
கதை கட்டுகதையே என்பதை உணர்த்தி விடுவார். ஆனால் சம்பவங்களை கண்ணால் கண்ட
அல்லது பிறரால் அறிந்த ஆசிரியர் தன் வரிகளை எளிமையாக தன் மனம் அறிந்தபடி
எழுதுவார். எளிமையான எழுத்து நடையும், சிற்சில விடயங்களில் காணப்படும்
நேர்த்திகளும் ஆசிரியர் தான் கண்டதையோ, பிறரால் தான் அறிந்ததையோ
எழுதுகிறார் என்பதை விளக்கிவிடும். இந்த எழுத்து நடையும் நேர்த்திகளும்
பைபிளில் காணப்படுவதை அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக