'மதம்' மனிதனால் படைக்கப்பட்ட வாழ்க்கை நெறி, வேதங்கள் எல்லாம்
கட்டுகதைகள், காலப்போக்கில் எழுந்த கற்பனைகள் என்ற எண்ணம் சிறிது நிலவி
வருகிறது. மதங்கள் எல்லாம் இப்படி தான் தோன்றின, நம்பிக்கைகள் உண்டான
இடம் அது, மனிதன் வழிபட்ட முதற்கடவுள் சூரியன், இயற்கை வழிபாட்டு முறை
இவைகள் எல்லாம் சிறிது சிறிதாக மதங்கள் என்ற பெயரில் பிரிந்து
உருவெடுத்தென என்று தன் மூளைக்கு எட்டியவரை மனிதன் கோட்பாடுகளை வகுக்க
முயற்சிக்கிறான். ஆனால் இந்த கோட்பாடுகள் எல்லாம் கிறிஸ்தவத்திற்கும்
பொருந்துமா? கிறிஸ்தவமும் பிற வழிகளை போன்று காலபோக்கில் எழுந்த மூட
நம்பிக்கையா? கிறிஸ்தவம் படைப்பு முதலே மனிதர்களுக்கும் இறைவனுக்கும்
உள்ள உறவா அல்லது பிற வழிகளை போன்ற ஒரு சராசரி மதமா? இந்த வினாக்களை
ஆராய்ந்து கண்ட முடிவுகள் இந்த பதிவில் பதிக்கப்பட்டுள்ளன.
1) கிறிஸ்தவம் பிற வழிகளை போல எழுந்த நம்பிக்கையா?
மனிதனின் கோட்பாடு பண்டைய மதங்கள் பலவற்றிற்கு பொருந்தினாலும் கிறிஸ்தவம்
இந்த வட்டதிற்குள் அடைபடுவதில்லை. சூரிய நமஸ்காரம், இயற்கை வழிபாடு,
ஜோசியம், ராசிபலன்கள், குறி சொல்லுதல், ஜாதகங்கள், சிலை வழிபாடு,
முன்னோர் வழிபாடு ஆகியவை உயர்ந்து விளங்கிய கால கட்டதில் சமூகத்தில் தோரா
- பைபிள் (கி.மு 3500?) தனித்து நிற்கிறது.
அ) சூரிய நமஸ்காரத்திற்கு மரணதண்டனை!
"நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வான
சேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், அது உன்
செவி கேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்
கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது
நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது
ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டு போய், அப்படிப்பட்டவர்கள்
சாகும்படி கல்லெறியக் கடவாய்"
- உபாகமம் 17:3-5
சூரிய நமஸ்காரம் அருவருக்கப்பட்ட செயலாக பைபிளில் காணப்படுகிறது. சூரிய
நமஸ்காரம் செய்கின்ற இஸ்ரவேலர்கள் மீது சாகும் வரை கல்லெறிய வேண்டும்
என்பது தோராவின் போதனையாகும். அக்கால நம்பிக்கைகளுள் யூதமே சூரிய
நமஸ்காரத்திற்கு தன்னை விலக்கி கொள்கிறது. இஸ்ரவேலை தவிர்த்து எகிப்து,
மசிடொனியா, இந்தியா, அரேபியா, சீனா, பெர்சியா, இத்தாலி என இறை
நம்பிக்கைகள் விளங்கிய பிற அனைத்து தேசங்களும் சூரிய நமஸ்காரத்தை
ஏற்றுள்ளதை காணலாம், ஆனால் இஸ்ரேலில் மட்டுமே சூரிய நமஸ்காரம் கொலை
குற்றமாக கருதப்படுகிறது.
ஆ) ஜோசியம், ராசிபலன், மாயவித்தை, குறி சொல்லுதல் - மரணதண்டனை!
"தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப் பண்ணுகிறவனும், குறி
சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும்,
சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாய வித்தைக்காரனும்,
செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு
அருவருப்பானவன்"
- உபாகமம் 18:10-12
"கர்த்தராகிய நான் பரிசுத்தராய்
இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய்
இருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும் படிக்கு, உங்களை மற்ற
ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறி
சொல்லுகிறவர்களுமாய் இருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலை
செய்யப்பட வேண்டும்; அவர்கள் மேல்
கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக் கடவது என்று
சொல் என்றார்" - லேவியராகமம் 20:26,27
ஜோசியம், ராசி பலன், குறி சொல்லுதல் போன்ற செயல்கள் தோராவில்
அருவருக்கப்படுகின்றன. அந்நாட்களில் இத்தாலி முதல் இந்தியா வரை அனைத்து
மக்களும் அஞ்சனம் (ஜோசியம்) பார்க்கிறவர்களாக காணப்பட்டனர். ஆனால்
இத்தகைய மூட நம்பிக்கைகள் இல்லாத சமூகமாக இஸ்ரவேலர்களே காணப்படுகின்றனர்.
இந்த செயல்களில் ஈடுபடும் இஸ்ரவேலர்களை கொலை செய்யுமாறு தோரா
போதிக்கிறது.
இ) சிலை வழிபாடு - தடை!
"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும்
உண்டாய் இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை
நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராய் இருக்கிற
நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப்
பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை
மட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன்"
-யாத்திராகமம் 20:4,5
சிலை வழிபாட்டை யூதம் அறவே வெறுக்கிறது. யேகோவா இறைவனே ஆனாலும் சிலைகளை
உண்டாக்கி வழிபட தோரா தடை விதிக்கிறது. இஸ்ரேலை அன்றி பிற தேசங்கள்
எல்லாம் சிலைகளையே அர்சித்து வந்தன. சிலை வழிபாட்டிலும் தன்னை விலக்கி
கொண்ட பண்டைய மக்களாக இஸ்ரவேலர்களே உள்ளனர். இதன் காரணமாகவே பண்டைய
காலத்தில் போற்றப்பட்ட தெய்வங்கள் பலவற்றின் சிலைகள் அகழ்வு
ஆராய்ச்சிகளில் மிகுதியாக கண்டெடுக்கப்பட்டாலும் யேகோவா தேவனுக்கு என
சிலைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. கிட்டியுள்ள ஓரிரு சிலைகளும்
புறக்கணிக்கப் பட்டவைகளாகவே உள்ளன.
ஈ) இறந்தோர் வழிபாடு - தடை!
பழங்கால நாகரீகங்களுள் சீன நாகரீகமும் பெருமைக்குரியது. இறந்த
முன்னோர்களை வழிபடும் மக்களாக பண்டைய சீனர்கள் வாழ்ந்தனர். இறந்தோர்
வழிபாட்டிற்கும் தோரா தடைவிதிக்கிறது. இஸ்ரவேலர்கள் இறந்த மக்களை வழிபட
தோரா அனுமதிப்பதில்லை.
"செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக் கொள்ளாமலும், அடையாளமான
எழுத்துக்களை உங்கள் மேல் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான்
கர்த்தர்" - லேவியராகமம் 19:28
"...செத்தவர்களிடத்தில் குறி கேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க
வேண்டாம்" - உபாகமம் 18:11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக