2.டொமீஷியன்(கி.பி.81-96)
தன் சிலையை வணங்க மறுத்த கிறிஸ்தவர்களையும் யூதர்களையும்
துன்பப்படுத்தினான்; இவன் தன்னை 'யூப்பிட்டர்' என்னும் கடவுள் என்று
பிரகடனம் பண்ணினான். இவனை வணங்க மறுத்த அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு
தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
3.ட்ராஜான்(கி.பி.98-117)
கிறிஸ்தவனாயிருப்பது ரோம சட்டத்திற்கு முரண்பட்டது என பிரகடனம்
செய்தான். இவன் ஆட்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்;
இக்னேசியஸ் என்ற பரிசுத்தவான் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்.
4.மார்கஸ் அரிலியஸ்(கி.பி.161-180)
இவன் நாட்களில் கலோசியம் என்று அழைக்கப்பட்ட திறந்தவெளி கலையரங்கில்
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பசியுள்ள சிங்கம், புலிகளுக்கு
இரையாக்கப்பட்டனர்; தலை வெட்டப்பட்டு மரித்தனர். போலிகார்ப், ஜஸ்டின்
மார்டைர் ஆகிய பரிசுத்தவான்கள் கொல்லப்பட்டனர்.
5.செப்டிமஸ் செவரஸ்(கி.பி.202-211)
இவன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக
சட்டம் இயற்றினான். இவன் நாட்களில் 'ஆரிஜன்' போன்ற கிறிஸ்தவ தலைவர்கள்
கொல்லப்பட்டனர்.
6.மேக்ஸிமஸ்(கி.பி.235)
இவன் நாட்களில் கிறிஸ்தவர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர்; உயிருடன்
தீ வைத்துக்கொழுத்தப்பட்டனர்; ஒரே குழியில் 50, 60 சடலங்களைப் போட்டு
மூடினான்.
7.டெசியஸ்(கி.பி.249)
இவன் முன்சொல்லப்பட்ட எல்லா பேரரசர்களைக் காட்டிலும் அதிகமாய்
கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான்; ஆனால் இவன் சில மாதங்களே ஆட்சி
செய்ததால் இவன் முயற்சி அதிகம் பலிக்கவில்லை.
8.வெலேரியன்(கி.பி.257)
இவன் நாட்களில் ஏற்பட்ட உபத்திரவத்தில் குறிப்பாக கார்த்தேஜ் பிஷப்
சைப்பிரியன் என்ற சிறந்த வேத பண்டிதரும், எழுத்தாளருமான தலைவர்
கொல்லப்பட்டார்.
9.ஆர்லியன்(கி.பி.274)
இவனும் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினான்.
10.டயக்ளீசியன்(கி.பி.303-310)
இவன் நாட்களில் எல்லா வேத பிரதிகளையும் சேகரித்து தீயில்
சுட்டெரிக்கும்படி சட்டம் இயற்றினான். கிறிஸ்தவனாயிருப்பது சட்டத்திற்கு
புறம்பானது எனப் பிரகடனம் பண்ணினான். கிறிஸ்தவ ஆராதனைக் கூடங்களை ஆராதனை
நடந்துகொண்டிருக்கும்போதே தீயிட்டு அழிக்கச் செய்தான்; ஏராளமான
கட்டிடங்களும், மக்களும் அழிக்கப்பட்டனர்.
"கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். நமது கடவுள்களின் ஆராதனை
புதுப்பிக்கப்பட்டது"என்ற வாசகமுள்ள நாணயம் அச்சிடப்பட்டு புழக்கத்தில்
விடப்பட்டது; கிறிஸ்தவ மூடநம்பிக்கை அழிக்கப்பட்டதற்கான ஞாபகார்த்த
சின்னம் என்ற ஒரு ஸ்தூபியை எழுப்பினான்.
கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி
உபத்திரம் எவ்வளவு பெருகினாலும் சபையின் வளர்ச்சி, கிறிஸ்தவர்களின்
வளர்ச்சி குன்றவில்லை, குறையவில்லை. இந்த உபத்திரவகால முடிவில் ரோம
சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்(12 கோடி) என்று
கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி)
கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.
சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று
கண்டுகொண்டான். கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக்
கையாண்டான்; கிறிஸ்தவர்களைக்கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான்.
கான்ஸ்டன்டைன்
ரோமப் பேரரசரான இவன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு
பிரமித்தான். ஒருநாள் பிரகாசமான ஒரு சிலுவையை தரிசனத்தில் கண்டான்."இந்த
அடையாளத்தில் ஜெயம் பெறு"என்ற சத்தத்தையும் கேட்டான். கான்ஸ்டன்டைன்
வெற்றி பெற்றான். கிறிஸ்தவனானான்; கிறிஸ்து மார்க்கத்தின் பாதுகாவலன்
என்று தன்னை பிரகடனப்படுத்தினான்.
கி.பி.324ல் அரசாங்கத்தையும் திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான்.
திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்;
சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து
ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க
மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு'பசிலிக்கா'(BASCILICA)என்ற மிக
ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள்
நடைபெற்றன.
கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருபபது
பெரிய சிலாக்கியமாயிற்று. திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினர்; அரசாங்க
சலுகைகளைப் பெறவும், உயர்பதவி பெறவும் கிறிஸ்தவர்களாயினர். பணத்திற்காக,
வசதியான வாழ்விற்காக சபைப்போதகர்களாக மாறினர்.
சபைக்கு ஏற்பட்ட சரிவு
கிறிஸ்தவம் உலகமெங்கும் வேகமாய்ப் பரவினாலும், சபை தன் புனிதத் தன்மையை
கொஞ்சங் கொஞ்சமாய் இழக்க ஆரம்பித்தது; மனந்திரும்பாதவர்கள், கிறிஸ்துவை
உண்மையாய் ருசியாதவர்கள், கிறிஸ்துவினால் அழைக்கப்படாதவர்கள் பல்வேறு பிற
காரணங்களுக்காக பிரசங்கியார்களாய், சபை மேய்ப்பர்களாய் பொறுப்பேற்றனர்.
எனவே பரிசுத்த ஆவியின் வல்லமை குன்றியது; பண வல்லமை மேற்கொண்டது; பிரசங்க
முறைகள் சொற்பொழிவுகளாக மாறின; வேத வசனம் மறக்கப்பட்டது; சபைகள்
முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.
சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக
பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை
சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர்.
பிற மதத்திலிருந்த
சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின.
வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை
சத்தியங்கள், எவை கிறிஸ்தவத்திற்கு முரண்பட்டவை என்பதை யாரும்
கண்டுகொள்ளவில்லை.இயேசுவின் திருச்சபை எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும்
கைக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக