சபையில் பாபிலோனிய பழக்கவழக்கங்கள்
நிம்ரோத்
தேவனுடைய திட்டத்தை முறியடிக்க சாத்தான் தெரிந்துகொண்ட பாத்திரம்
நிம்ரோத். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலமொழியாகிய எபிரேய மொழியில் இவன்
பெயர்'மாரட்'. இதன் பொருள்'கலகம்'.
"இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்"(ஆதி 10:9).
இவன் மனிதரையும் மிருகங்களையும் வேட்டையாடும் பராக்கிரமசாலியாக
இருந்தான். இவன் தேவனுக்கு விரோதமான பல செயல்களைச் செய்தான். நோவாவின்
குமாரரில் ஒருவனான காமுக்குப் பிறந்தவன் கூஷ். இவன் மகன்தான் நிம்ரோத்;
இவனும் இவன் சேனையும் நோவாவின் குமாரரில் ஒருவனான சேமுக்குக்
கொடுத்திருந்த அசீரியா நாட்டிற்குள் படையெடுத்துச்சென்று அதைக்கைப்பற்றி
நினிவே பட்டனத்தைக் கட்டினான். தேவன் பிரித்துக் கொடுத்திருந்த தேச
எல்லைகளை மாற்றி இவன் கலகம் செய்ததால்'கலகக்காரன்'என்ற
பொருள்படும்'நிம்ரோத்'என்ற பெயரைப் பெற்றான்
அன்று அறியப்பட்ட மக்களையும் முழு உலகத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர
திட்டமிட்டு செயல்பட்டான். இந்தத் திட்டத்தை செயல்படுத்த புதிய
மதத்தையும் புதிய ஆட்சிமுறையையும் கொண்டுவந்தான். சிநெயார் சமவெளியில்
பாபேல் என்ற பட்டணத்தைக் கட்டினான்(ஆதி 10.10). இதில் பாபேல் என்ற மிக
உயரமான ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தான்(ஆதி 11:4)
பாபிலோனியர் நிம்ரோத்தை அரசனாகவும், கடவுளாகவும் மதித்து வணங்கினர்.
'செமிராமிஸ்' என்ற பெண் தேவதை நிம்ரோதின் தாய் என்று கூறப்பட்டுள்ளது;
இவள் இவனுடைய மனைவி என்றும் சில இடங்களில் வருகின்றது.
பாபேல் என்பதற்கு எபிரேய வார்த்தை 'பாபிலு'; இதன் பொருள் 'குழப்பம்';
அதுவரை பூமியெங்கும் ஒரே மொழியாயிருந்ததை தேவன் இந்த இடத்தில்
தாறுமாறாக்கினார்(ஆதி 11:5-9). சகல குழப்பங்களும் இந்த பாபேலில் இருந்தே
உருவாயின.
பாபிலோனில் கட்டப்பட்டுவந்த பாபேல் கோபுரம் மிக உயரமாக இருந்தது.
ஆங்கிலத்தில் ZIGGURAT என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1000
கோபுரங்களடங்கிய கட்டிடமாக, வட்ட வடிவமான முறையில் உயரமாக பிரம்மாண்டமான
அளவில் கட்டப்பட்டது.
செமிராமிஸ் என்ற பெண் தேவதைக்கு 'அஸ்தரோத்' என்ற பெயரும்
உண்டு.'அஸ்தரோத்'என்றால் 'கோபுரங்களை உண்டுபண்ணின பெண்' என்று பொருள்.
இவளுக்கு'சைபெலி'என்பது மற்றொரு பெயர். இதன் பொருள் 'கோபுரங்களை
சுமக்கிறவள்'. இவளுடைய தலையில் கோபுரம் போன்ற கிரீடம்
வைக்கப்பட்டிருக்கும்.
பாபேல் கோபுரத்தில் ஏழு பகுதிகள் அடங்கியிருந்தன; முதல் பகுதி விக்கிரக
கடவுள்களுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் உச்சியில்
சுமார் 60X80 அடி சதுரத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது. இது
பெல்மொர்தாக் என்றும் மர்துக் என்றும் அழைக்கப்பட்ட 'பாகால்' என்ற
கடவுளுக்கு கட்டப்பட்டது.
இந்த கோவிலுக்குள் 12 ZODIAC SIGNS இருந்தன என்று தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்; அதாவது மாயவித்தைக்குப்
பயன்படும் 12 அடையாளங்கள் இந்தக் கோவிலுக்குள் வரையப்பட்டிருந்தன.
இவைகளைக் குறித்து பின்பு பார்ப்போம்.
இந்தக் கோபுரம் மெய்தேவனுக்கு விரோதமான ஆராதனை முறைகளை கைக்கொள்ளும்
விதத்தில் கட்டப்பட்டிருந்தது; எனவே நிம்ரோத் சிலை வணக்கத்தை, சிலை
ஆராதனையை அறிமுகம் செய்யும் கருவியாக சாத்தானால் பயன்படுத்தப்பட்டான்.
சிலை வணக்கம்-புதிய மதம்-புதிய ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்து மெய்தேவ
வழிபாட்டிலிருந்து பிரித்து மக்கள் சாத்தானை வணங்க வழிவகுத்தான்.
ஆதிசபை
அப்போஸ்தல நடபடிகளில் சபையின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் காண்கிறோம்.
யூத பண்டிகையாகிய பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் தீர்க்கதரிசன நிறைவேறுதலாக
எருசலேமில் கூடியிருந்த சீடர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
பேதுரு எழும்பி பிரசங்கித்தான். வசனத்தைக் கேட்டவர்கள், மனந்திரும்பி
திருமுழுக்குப் பெற்றனர். இதுவே திருச்சபையின் பிறந்தநாள், ஆரம்பநாள்.
இதைத் தொடர்ந்து இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளங்கள் நடைபெற்றன.
திருவசனம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் பிரசங்கிக்கப்பட்டது.
அனுதினமும் சபையில் ஏராளமானோர் சேர்ந்தார்கள்
அன்று அறியப்பட்ட உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி பரவ ஆரம்பித்தது.
பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டன. இது சாத்தானுக்குப் பிடிக்காதல்லவா?
அவன் உபத்திரவத்தை கட்டவிழ்த்து விட்டான். கிறிஸ்தவர்கள் எல்லா
இடங்களிலும் துன்புறுத்தப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மிருகங்களுக்கு
இரையாக்கப்பட்டனர்.
ஆதிசபையில் உபத்திரவம்
ஏராளமான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மடிந்தனர்; மதவெறியர்களும் ,
அரசியல் தலைவர்களும் கிறிஸ்து மார்க்கத்தை அழித்துவிட முயன்றனர். அன்று
உலகை ஆண்ட ரோமப்பேரரசர்கள் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தனர்;
அவர்களில் சிலர்....
1.நீரோ(கி.பி.54-68)
இவன் 16 வயதில் பேரரசனானான். 25 வயது முடிவதற்குள் தன் மனைவி ஆக்டேவியா,
தாய், தன் சகோதரன் ஆகியோரை கொன்றான். ஒருநாள் ரோமபுரி தீப்பற்றி
எரிந்தது. நெருப்பு வைத்தது நீரோ மன்னனே என்றும் சிலர் குற்றம்
சாட்டுகின்றனர்.
கிறிஸ்தவர்களைப் பகைத்த நீரோ, இந்த நெருப்பை வைத்தது கிறிஸ்தவர்கள் என்று
அநியாயமாய் குற்றம்சாட்டி, கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திக் கொன்றான்.
கி.பி.67ல் அப்போஸ்தலனாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்.
பவுல் கி.பி.68ல் ரோமபுரியில் தலைவெட்டப்பட்டு மரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக